தி.மு.க.வின் கம்பீரத்திற்கு முன்னோடிகள் தான் காரணம் - மு.க.ஸ்டாலின்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. மற்றும் அனைத்து அணிகளின் சார்பில் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா திருவண்ணாமலை சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்ட மூத்த முன்னோடிகள் 195 பேருக்கு பொற்கிழியை வழங்கினார்.
கருணாநிதி பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-ந் தேதி முதல் தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். இந்த விழாவை வருகிற ஜூலை, ஆகஸ்டு மாதம் என ஆண்டு முழுவதும் நடத்தி வருகிறோம்.
ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் பல்வேறு வகையில் நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம், இனிப்பு வழங்குதல் நிகழ்ச்சி என்று கொண்டாடி வருகிறோம். தி.மு.க. இன்றைக்கு கம்பீரமாக நின்று கொண்டிருப்பதற்கு காரணம் நமது இயக்கத்திற்காக பாடுபட்ட முன்னோடிகள் தான்.
இந்த இயக்கத்திற்காக உழைத்து இருக்கக்கூடிய முன்னோடிகளுக்கு சிறப்பு செய்யக்கூடிய அடிப்படையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நாங்கள் எத்தனையோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், இயக்கத்தின் முன்னோடிகளை பெருமைப்படுத்த கூடிய இந்த நிகழ்ச்சிதான் தலை சிறந்த நிகழ்ச்சியாகும். இந்த பொற்கிழி வழங்கப்படுவது நீங்கள் உழைத்த உழைப்பிற்கு சன்மானம் என்று நீங்கள் கருதக்கூடாது. நீங்கள் உழைத்த உழைப்பிற்கு விலை கிடையாது. உங்களை பெருமைப்படுத்துவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் நான் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் துர்கா ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர். #MKStalin #Karunanidhi