உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் 1100 சிம்கார்டு விற்பனையாளர்கள் கண்காணிப்பு- மோசடிகளை தடுக்க சைபர் கிரைம் தீவிரம்

Published On 2023-05-10 08:04 GMT   |   Update On 2023-05-10 08:04 GMT
  • கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 55,982 சிம்கார்டுகளை முடக்கியுள்ளனர்.
  • சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் போலி சிம்கார்டுகள் மற்றும் மோசடியை தடுக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சைபர் கிரைம் போலீசார் தொலைத்தொடர்பு துறையின் முக அடையாளம் காணும் சாப்ட்வேர் மூலம் ஆய்வு செய்தனர்.

இதில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 55,982 சிம்கார்டுகளை முடக்கியுள்ளனர்.

ஒருவர் 403 சிம்கார்டுகளை வாங்கியுள்ளார். ஒரு பெண்ணுக்கு 34 கார்டுகள் உள்ளது. ஒரு சிறுவன் 5 கார்டுகள் வாங்கியது அம்பலமாகியுள்ளது. இந்த சிம் கார்டுகள் அனைத்தும் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1100 சிம்கார்டு வியாபாரிகளை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

போலி சிம்கார்டுகளை வியாபாரிகள் எதற்காக விற்பனை செய்தனர் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பி சஞ்சய் குமார் கூறியதாவது:-

பல சிம்கார்டுகளை வாங்கியவர்களின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை அவர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம்.

யாருடைய சிம்கார்டுகள் முடக்கப்பட்டதோ அவர்கள் அவற்றைத் திரும்பப் பெறுவதற்கு அதிகாரிகளிடம் தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்து உண்மைத்தன்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

போலி சிம்கார்டுகள் வாங்கியவர்களின் விவரங்களை ஆராய்ந்து வருகிறோம். அவர்கள் கிரிமினல் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கண்டறிந்தால், அவர்களைக் கண்காணிக்க அந்தந்த போலீஸ் பிரிவுகளை எச்சரிப்போம்."

சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்துள்ளது. ஹெல்ப்லைன் 1930 அல்லது நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டல் (என்.சி.ஆர்.பி) மூலம் சந்தேக நபர்களின் வங்கி கணக்குகள் விரைவாக முடக்கப்பட்டு, மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்க விடாமல் தடுப்போம்.

2022-ம் ஆண்டில், போலி மோசடி அழைப்பு மூலம் பொதுமக்கள் ரூ.288 கோடியை இழந்துள்ளனர், அதில் ரூ.106 கோடி முடக்கப்பட்டுள்ளது, 2023-ம் ஆண்டில் முதல் 3 மாதங்களில், ரூ.67 கோடி பொதுமக்களிடமிருந்து போலி மோசடி கும்பல் அபேஸ் செய்துள்ளனர். அதில் ரூ.49 கோடி முடக்கப்பட்டுள்ளது.

1930 ஹெல்ப்லைன் 24 மணிநேரமும் வேலை செய்கிறது. சராசரியாக ஒரு நாளில் 600 அழைப்புகள் வருகிறது. இதில் 250 புகார் பதிவு செய்யப்படுகிறது.

பெரும்பாலான மோசடிகள் தகவல்களை திருடும் புதிய மென்பொருள் மூலம் நடந்துள்ளது.

இதுபோன்ற குற்றங்களில் தொடர்புடைய செல்போன் எண்கள் தொடர்ந்து செயல்படுவதால் சந்தேக நபர்கள் மக்களை எளிதில் ஏமாற்றி வருகின்றனர்.

1930 ஹெல்ப்லைனை விரிவுபடுத்த மாநில அரசு ரூ.9.28 கோடி அனுமதித்துள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கை 8-ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News