பெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது- அண்ணாமலை
- அண்ணாமலை சாட்டையால் அடித்தபோது நிர்வாகிகள் அவரை தடுக்க முயன்றனர்.
- கண் முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு காரணமாக தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த பா.ஜ.க.வினரின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் மாநில தலைவர் அண்ணாமலை மட்டும் திட்டமிட்டபடி தனது கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினார்.
கோவை சிட்ரா-காளப்பட்டி சாலையில் உள்ள தனது வீட்டின் முன்பு இன்று காலை அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். வீட்டில் இருந்து உடலில் மேல்சட்டை அணியாமல் வெளியே வந்த அவர் பச்சை வேட்டியும், அதனை சுற்றி துண்டும் கட்டியிருந்தார். தேங்காய் நாரால் பின்னப்பட்ட சாட்டையை கையில் வைத்திருந்தார்.
வீட்டு வாசலில் அந்த சாட்டையால் சட்டை அணியாத உடலில் தனக்கு தானே அடித்துக் கொண்டார். இவ்வாறு 6 முறை தன்னை சாட்டையால் அடித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் அண்ணாமலை தான் கூறியபடி காலணி அணியாமல் இருந்தார்.
அண்ணாமலை சாட்டையால் அடித்தபோது நிர்வாகிகள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சாட்டையால் அடித்துக்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
* தி.மு.க.வின் மீதான வெறுப்புக்கோ, தனிமனிதன் மீதான வெறுப்புக்கோ சாட்டையால் அடித்துக்கொள்ளவில்லை.
* கிடைக்கும் அனைத்து மேடையிலும் தி.மு.க.வை தோலுரிப்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தவே 6 சாட்டை அடிகள்.
* தி.மு.க. ஆட்சியில் பல்வேறு தவறான சம்பவங்கள் நடைபெறுகிறது.
* பெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
* தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்து வருகிறது. பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது.
* கண் முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை.
* சிசிடிஎஸ்-ல் எந்த ஆவணமும் கசிய வாய்ப்பில்லை. Download செய்தால் மட்டுமே கசிவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.