உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் அடுத்தடுத்து விபத்து: என்ஜினீயரிங் மாணவர் பலி
உளுந்தூர்பேட்டை:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கொடம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா கட்டிட மேஸ்திரி. இவரது மகன் காளிராஜ் (21). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கருப்பையா தனது மகன்கள் காளிராஜ், சூரியபிரகாஷ் மற்றும் உறவினர் ராஜேந்திரன் ஆகியோருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று இரவு காரில் புறப்பட்டார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் கார் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் நின்றது. அப்போது பின்னால் திருசெங்கோட்டில் இருந்து சென்னைக்கு லோடு ஏற்றிவந்த வேன் அதிவேகமாக வந்து கார் மீது மோதியது.
மோதிய வேகத்தில் கார் முன்னாள் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த காளிராஜ், கருப்பையா, ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து 4 பேரையும் மீட்டனர். காளிராஜ் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த கருப்பையா உள்ளிட்ட 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பற்றி பொதுமக்கள் கூறுகையில்,
உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. அதற்கு காரணம் டோல்கேட்டில் ஆட்கள் பற்றாக்குறைதான்.
சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.