செய்திகள்

ஆண்டிமடத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம்: சப்–இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

Published On 2016-06-06 20:13 IST   |   Update On 2016-06-06 20:13:00 IST
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விசாரணை கைதி தப்பி ஓடியதால் சப்–இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அண்ணங்காரகுப்பம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கோவில் பூசாரி, தர்மகர்த்தா, நாட்டாமைகள் அனைவரும் கோவிலின் ஒரு பகுதியில் ஆலோசணை கூட்டம் நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது டிப்டாப் ஆசாமி ஒருவர் சாமி கும்பிடுவது போல் கோவிலுக்குள் சென்று திரெளபதியம்மனின் கழுத்தில் இருந்த தாலியை எடுத்துள்ளார்.

இதை கவனித்த பூசாரி முருகன் சத்தம் போடவே, அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் தப்பி ஓட முயன்ற டிப்டாப் ஆசாமியை மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரித்ததில் திருவள்ளுர் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூர் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த யுவராஜ் (30) என்பது தெரியவந்தது.

இதையடுத்து பொதுமக்கள் யுவராஜை ஆண்டிமடம் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் பூசாரி முருகன் புகார் அளித்ததின் பேரில் பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் வழக்கு பதிவு செய்து யுவராஜை கைது செய்தார்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்த யுவராஜ், திடீரென போலீசாரை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணை கைதி தப்பியோடியதை தொடர்ந்து பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியனை , அரியலூர் எஸ்.பி. அருண்குமார் கிரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Similar News