செய்திகள்

எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட தகுதி நுழைவுத் தேர்வு: சென்னையில் நாளை நடைபெறுகிறது

Published On 2016-07-23 13:15 IST   |   Update On 2016-07-23 13:15:00 IST
எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட தகுதி நுழைவுத் தேர்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது, இந்த தேர்வை தமிழகத்தில் இருந்து 14,500 மாணவர்கள் எழுதுகிறார்கள்.
சென்னை:

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை நிரப்ப சுப்ரீம் கோர்ட்டு புதிய வழிமுறைகளை வகுத்து உத்தரவிட்டது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர் நிலை பல்கலைக் கழகங்களில் உள்ள இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்ற ஒரே நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.

மே 1-ந்தேதி நடந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு தகுதி தேர்வாக கணக்கிடப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினார்கள்.

இந்த நிலையில் நாளை (24-ந்தேதி) 2-ம் கட்ட தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை தமிழகத்தில் இருந்து 14,500 மாணவர்கள் எழுதுகிறார்கள். நாடு முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னையில் 21 மையங்களில் நாளை தேர்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் கூறுகையில், இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெற உள்ளது.

காலை 9.30 மணிக்கு பிறகு வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேசிய தகுதித் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு 17-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது என்றனர்.

Similar News