செய்திகள்

தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை: இலங்கை அரசு முடிவு

Published On 2016-07-26 01:48 IST   |   Update On 2016-07-26 01:48:00 IST
இலங்கை சிறைகளில் இருந்த தமிழக மீனவர்கள் 77 பேரை விடுதலை செய்ய அந்த நாடு முடிவு செய்து உள்ளது.
ராமேசுவரம்:

இலங்கை சிறைகளில் இருந்த தமிழக மீனவர்கள் 77 பேரை விடுதலை செய்ய அந்த நாடு முடிவு செய்து உள்ளது.

தமிழகத்தில் இருந்து கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 77 மீனவர்கள் படகுகளுடன் இலங்கை கடற்படையால் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் இவர்கள் இலங்கையில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா, நீர்க்கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இந்த மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், இலங்கையில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். மேலும் மத்திய மந்திரி சுஷ்மாசுவராஜ் கடிதம் மூலம் மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசை கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 77 பேரையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து முதல்கட்டமாக யாழ்ப்பாணம் சிறையில் இருந்த ராமேசுவரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 43 மீனவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 43 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோல் நீர்க்கொழும்பு சிறையில் இருந்த பாம்பன் மீனவர்கள் 6 பேர் கல்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

வவுனியா சிறையில் உள்ள 28 மீனவர்கள் இன்று (26-ந் தேதி) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட உள்ளனர்.

ஆனால் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 102 படகுகளை விடுவிக்க உத்தரவிடப்படவில்லை.

நேற்று விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 49 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு விரைவில் தமிழகம் திரும்ப உள்ளனர்.

Similar News