செய்திகள்

விமானத்தை தேடும் பகுதி மேலும் விரிவுபடுத்தப்பட்டது: கடலோர காவல்படை அதிகாரி தகவல்

Published On 2016-07-26 08:25 IST   |   Update On 2016-07-26 08:25:00 IST
மாயமான விமானத்தை தேடும் பகுதி மேலும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது என்று கடலோர காவல் படை அதிகாரி கூறினார்.
சென்னை:

சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானில் உள்ள போர்ட்பிளேருக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை ஏ.என்.32 ரக ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்தில் அது சென்னைக்கு அருகே திடீரென மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுவதால் கடந்த 4 நாட்களாக அந்த விமானத்தை தேடும்பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து இந்திய கடலோர காவல்படையின் தென்மண்டல ஐ.ஜி. ராஜன் பர்கோத்ரா சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் இன்று(நேற்று) 4-ம் நாளாகும். தேடும் பணியை விமானப்படை, கப்பல் படை, கடலோர காவல்படை ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன.

தேடும் பணியில் கடந்த சில நாட்களாக என்ன செய்தோம்? அதில் என்ன நடந்தது? தேடுதலில் தெரிய வந்தது என்ன? அடுத்ததாக என்ன செய்ய இருக்கிறோம் என்பதைப் பற்றி கூறுகிறேன்.

சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் கப்பல்களுக்கு விமானம் காணாமல் போனது பற்றிய தகவல்களை கொடுத்திருக்கிறோம். இந்தப் பாதையிலும், பக்கவாட்டிலும் விமானங்களும், கப்பல்களும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

சென்னையில் இருந்து கிழக்கு திசையில் 150 கடல்மைல் தொலைவில் அந்த விமானம் காணாமல் போனது. இந்தத் தேடுதல் பணியில் இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. உயிருடன் இருப்பவரோ அல்லது விமானத்தின் உடைந்த பாகங்களோ தென்படவில்லை.

தேடுதல் பணிக்கான இடம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கப்பல் மூலம் தேடப்படும் பரப்பளவு 14 ஆயிரத்து 400 சதுர கடல்மைல் ஆகும். விமானம் மூலம் தேடப்படும் கடலின் பரப்பளவு 60 ஆயிரம் சதுர கடல்மைல் ஆகும்.

தேடும் பணிக்கு இது மிகப் பெரிய அளவுதான். ஆனாலும் அனைத்து திசைகளிலும் தேடுதலை நடத்த வேண்டியது உள்ளது. கப்பல் படையின் 13 கப்பல்கள், கடலோர காவல் படையின் 2 கப்பல்கள் தேடுதல் பணியில் உள்ளன. அந்தமான் போர்ட் பிளேரில் இருந்தும் கப்பல்கள் வந்து தேடுகின்றன.

தேடிய இடங்களில் கிடைத்த பொருட்களை சேகரித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் அவை காணாமல் போன விமானத்தின் பாகங்கள் அல்ல என்று கண்டறியப்பட்டது. ஒரு பெட்டி, மரக் கட்டைகள், சிலிண்டர் போன்றவை கண்டெடுக்கப்பட்டாலும் அவை மீன்பிடி படகின் பாகங்கள் என்று ஆய்வில் தெரிய வந்தது.

அதே இடத்தில் தொடர்ந்து தேடுதல் பணி நடக்கிறது. தேடுதல் பணியில் உள்ள கப்பல் மற்றும் விமானங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அந்தந்த பகுதிகளுக்கு சென்று தேடி வருகிறோம்.

இந்த தேடுதல் பணிக்கு இஸ்ரோ நிறுவனம், என்.ஐ.ஓ.டி. உள்பட பல நிறுவனங்களின் உதவியை நாடியிருக்கிறோம்.

தேடுதல் பணியின்போது பெரிய அளவில் மோசமான வானிலை உருவாகவில்லை. எனவே அந்தப் பணியில் எந்தவித குறைபாடும் நேரவில்லை. ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் இ.எல்.டி. (எமர்ஜென்சி லொக்கேட்டர் டிரான்ஸ்மிட்டர்) என்ற கருவியில் இருந்து கிடைக்க வேண்டிய சிக்னல் கிடைக்கவில்லை. அதுகிடைத்தால் மட்டுமே எங்களின் தேடும் பணி எளிதாகும்.

கடந்த சில விமானம் காணாமல் போன சம்பவங்களில்கூட இ.எல்.டி. கருவி வேலை செய்யவில்லை. இது கவலையளிக்கும் விஷயம். இதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். ஒன்றுக்கு மேற்பட்ட சம்பவங்களில் இ.எல்.டி. செயல்படாமல் போனது உண்மைதான். இதிலுள்ள குறைபாடு அதன் தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

கடல் மட்டத்தில் இருந்து யாரையும் அல்லது விமானத்தின் பாகங்களையும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டால், அடுத்ததாக கடலுக்கு அடியில் சென்று தேடும் பணியை தொடர வேண்டும். இதற்காக நீர்மூழ்கிக் கப்பலை, கப்பல் படை அங்கு நிறுத்தி இருக்கிறது. அது 26-ந் தேதியில் இருந்து இன்று பணியைத் தொடங்கும்.

எங்களுடன் பணியாற்றிய முத்துக்கிருஷ்ணன் என்பவர் மாயமான அந்த விமானத்தில் இருந்திருக்கிறார். மற்ற நபர்களின் பட்டியலை விமானப் படைதான் வெளியிட வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தொழில்நுட்ப முகமைகளை நாங்கள் தொடர்பு கொண்டு வருகிறோம். கடைசியாக சிக்னல் எங்கிருந்து கிடைத்தது என்பதுபோன்ற தகவல் பெறப்பட்டால், கடலுக்குள் தேடும் இடத்தை சரியாக நிர்ணயிக்க முடியும்.

கடலிலோ அல்லது தரையிலோ விமானம் விழுந்தால், அதிலிருக்கும் டிரான்ஸ்மிட்டர் கருவிகள் செயல்படும். விமானம் காணாமல் போனதற்கான காரணத்தை நாங்கள் கூற முடியாது. தேடும் பணியில் நாங்களும் ஒருங்கிணைந்திருக்கிறோம்.

கடந்த ஒரு ஆண்டில் இதுபோல் 2 சம்பவங்கள் நடந்துள்ளன. இரண்டுமே ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமாகி இருக்கின்றன. இரண்டு விமானத்திலும் இருந்தவர்களிடம் இருந்து கடைசி நேரத் தகவல்கள் வரவில்லை. கடந்த ஆண்டு டோர்னியர் விமானம் விழுந்தது இரவு நேரத்தில்; இப்போது பகல் நேரத்தில் நடந்துள்ளது.

தேடும் பணிக்கென்று தனி விதிகள் உள்ளன. அதன்படி பணியை செய்கிறோம்.

கடலின் ஆழம் 3 ஆயிரத்து 400 மீட்டராகும். எனவே அதில் சற்று சிரமம் உள்ளது. ஆனால் இதுவரை வெளியாட்கள் யாருடைய உதவியையும் நாங்கள் கோரவில்லை. என்.ஐ.ஓ.டி. நிறுவனத்தின் கப்பலை கேட்டிருக்கிறோம். அது மொரிஷியசில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருக்கிறது. கடலடியில் மேற்கொள்ளப்படும் தேடுதலுக்கு அதுவும் பயன்படுத்தப்படும்.

கடல் மட்டத்தில் தேடும் பணியில் எதுவுமே கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில் கடலுக்கு அடியில் சென்று தேடுவதுதான் அடுத்தகட்ட நடவடிக்கையாகும். இது கடல் மட்டத்தில் தேடுவதுபோன்ற பணியல்ல. கடலுக்குள் சரியான இடத்தை தேர்வு செய்து அங்கு மட்டும் தேடவேண்டும்.

மேல் மட்டத்தில் எந்தவொரு உடைந்த பாகமும் காணப்படவில்லை என்பதால் விமானம் விழுந்திருக்க வாய்ப்புள்ள இடத்தை துல்லியமாக கணக்கிட முடியவில்லை. ஆனாலும், விமானத்தில் இருந்து கடைசியாக எங்களிடம் தொடர்பு கொண்ட பகுதியை தேர்வு செய்து அங்கு தேடமுடியும்.

கடலுக்குள் குறுகிய இடத்தில்தான் தேடுதலை நடத்த முடியும். எனவே விமானம் விழுந்த இடத்தை ஆய்வு செய்து கண்டறிந்து, நீர்மூழ்கிக் கப்பல் போன்ற தேடுதல் கப்பல்களை அங்கு பயன்படுத்த முடியும். இடத்தை கண்டுபிடிக்க முடியாததால்தான் இவ்வளவு நாள் ஆகிவிட்டது.

இந்த தேடுதல் பணிக்கும், விமானம் விழுந்த இடத்தை நிர்ணயிக்கும் பணிக்கும் காலக்கெடு வைக்கப்படவில்லை. நீண்ட தேடலுக்கு தயாராக இருக்கிறோம்.

கடந்த முறை டோர்னியர் விமானம் விழுந்தபோது, சிக்னலை அறிவதற்காக ரிலையன்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலின் உதவியை நாடினோம். இப்போதும் தனியார் நிறுவன உதவிகளை கண்டிப்பாக நாடுவோம். ஆனால் இதுவரை அழைக்கவில்லை. தற்போது அந்தக் கப்பல் நார்வேயில் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடற்படை தளபதி அருப் ராஹா டெல்லியில் நிருபர்களிடம் கூறும்போது, “காணாமல் போன விமானத்தை பற்றியோ, அதில் பயணம் செய்தவர்கள் குறித்தோ இதுவரை எந்த தகவலும் கிடைக்காதது மிகவும் கவலை அளிக்கிறது. இது எங்கள் அனைவருக்கும் ஒரு கடினமான தருணம். எங்களுடைய கவலைகளை கலக்கத்துடன் உள்ள 29 பேரின் குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொண்டு உள்ளோம்.

மாயமான விமானம் ஏ.என்.-3 ரக போர் விமானங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த முறையில் இயங்கி வந்துள்ளது. உலகின் மிக உயரமான விமான ஓடுபாதையான காஷ்மீரின் தவ்லத் பெக் ஓல்டியிலும் சிறப்பாக தரையிறங்கி இருக்கிறது. எனவே இதன் திறன் பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை” என்றார்.

Similar News