செய்திகள்

பள்ளி வாகனங்களில் அதிக குழந்தைகளை ஏற்றினால் நடவடிக்கை: போலீஸ் ஐ.ஜி. எச்சரிக்கை

Published On 2016-07-26 17:15 IST   |   Update On 2016-07-26 17:15:00 IST
பள்ளி வாகனங்களில் அதிக குழந்தைகளை ஏற்றினால் மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என புதுவை போலீஸ் ஐ.ஜி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை போலீஸ் ஐ.ஜி. கண்ணன் ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ மற்றும் வேன்கள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் மாணவர்களை ஏற்றி செல்கின்றனர். இதனால் பல இடர்பாடுகள் ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி சரியான நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் அடுத்த வண்டியை முந்திச் செல்ல போட்டி போட்டு வேகமாக செல்கின்றனர். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு விபத்து ஏற்படுகிறது.

வண்டியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை தவிர்த்து பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் மாணவர்களின் பெற்றோரும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதுவை 100 அடி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அதையொட்டி கடலூர் செல்லும் அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாக வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதியப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News