செய்திகள்

தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

Published On 2016-08-28 10:35 IST   |   Update On 2016-08-28 10:35:00 IST
காற்றழுத்த தாழ்வு நீடிப்பதால் தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.

இதற்கிடையே மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. நகரின் ஒருசில பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

நுங்கம்பாக்கத்தில் 0.9 மி.மீட்டர் மழையும், விமான நிலையத்தில் 14.3 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ளதால் வட தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும். ஒருசில பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News