செல்போனில் மலர்ந்த காதல்: இளம்பெண்ணை கடத்திய வாலிபர்
சேலம்:
சேலம் டவுன் மேட்டு ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். பூவியாபாரி. இவரது மகள் கலையரசி (வயது 21). இவர் சேலம் அம்மாப் பேட்டையில் உள்ள நாச்சியப்பா கூட்டுறவு மையத்தில் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்தார்.
இந்த நிலையில் இவருக்கும், சென்னையை சேர்ந்த மணி என்ற வாலிபருக்கும் செல்போனில் பழக்கம் ஏற்பட்டது. வாட்ஸ் அப் அனுப்பிய போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இதில் காதலில் முடிந்தது. செல்போனில் இருவரும் பேசி வந்தனர். இதை அறிந்த கலையரசியின் பெற்றோர் அவரை கண்டித்தனர். ஆனால் அவர் தொடர்ந்து மணியுடன் பேசி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மணி சேலம் வந்து இளம்பெண் கலையரசியை கடத்தி சென்று விட்டார். இதை அறிந்த சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் கலையரசியை தேடினர். ஆனால் அவர் எங்கும் இல்லை. அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதனால் கலையரசின் பெற்றோர் சேலம் டவுன் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.