செய்திகள்

திருமங்கலம் - நேரு பூங்காவரை பணிகள் நிறைவு: மெட்ரோ சுரங்க ரெயில் 2 வாரத்தில் ஓடும்

Published On 2017-05-04 07:49 GMT   |   Update On 2017-05-04 07:49 GMT
திருமங்கலம் - நேரு பூங்கா வரையிலான சுரங்க ரெயில் போக்குவரத்து விரைவில் தொடங்கப்பட உள்ளது. அரசின் திறப்பு விழா தேதி அனுமதிக்காக காத்திருக்கிறது.
சென்னை:

திருமங்கலம் - நேரு பூங்கா வரையிலான சுரங்க ரெயில் போக்குவரத்து விரைவில் தொடங்கப்பட உள்ளது. அரசின் திறப்பு விழா தேதி அனுமதிக்காக காத்திருக்கிறது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் மக்களின் விரைவு பயணத்துக்காகவும் 14,600 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக கோயம்பேடு முதல்- ஆலந்தூர் வரையிலும் அதை தொடர்ந்து சின்னமலை விமான நிலையம் வரையிலும் உயர்மட்ட பாதையில் மெட்ரோ போக்குவரத்து தொடங்கப்பட்டது.

2-வது கட்டமாக பூமிக்கடியில் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையில் சுரங்க ரெயில் போக்குவரத்துக்காக சுரங்க பாதை அமைக்கப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையொட்டி சோதனை ரெயில் ஓட்டம் நடந்தது. மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து அனுமதி சான்றிதழ் அளித்தார்.

இதை தொடர்ந்து பயணிகள் போக்குவரத்துக்காக விரைவில் சுரங்க மெட்ரோ ரெயில் திறக்கப்பட உள்ளது. தற்போது தமிழக அரசின் அனுமதிக்கு கோரப்பட்டுள்ளது. அரசின் அனுமதி இன்னும் 2 வார தினங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமங்கலம், அண்ணா நகர், செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, நேரு பூங்கா உள்பட அனைத்து ரெயில் நிலையங்களில் நுழைவு பாதை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பயணிகளுக்காக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து ரெயில் நிலையங்களிலும் நுழைவு பாதை, வெளியே செல்லும் பாதைகள் என 2 பாதைகள் விரைவாக அமைக்கப்பட்டு வருகிறது. ரெயில் நிலையங்கள் அனைத்திலும் குளிர் சாதன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் கவுண்டர்கள், கழிப்பிட வசதிகள், குடி தண்ணீர் வசதிகள் என அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி கூறியதாவது:-

திருமங்கலம்- நேரு பூங்கா வரையில் 7.6 கி.மீட்டர் சுரங்க ரெயில் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. விரைவில் ரெயில் சேவை தொடங்கும் திறப்பு விழாவுக்காக தமிழக அரசின் அனுமதிக்கு காத்திருக்கிறோம்.

அனுமதி கிடைத்ததும் பொதுமக்களுக்காக ரெயில் சேவை தொடங்கும் சுரங்க ரெயில் பயணம் பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் புதிய அனுபவமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News