செய்திகள்

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை: மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

Published On 2017-05-31 11:48 IST   |   Update On 2017-05-31 11:48:00 IST
மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் தடை உத்தரவை கண்டித்தும், இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத தமிழக அரசை கண்டித்தும் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை:

மாடு, காளைகள், ஒட்டகம் போன்ற கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவோ, வாங்கவோ கூடாது என்று மத்திய அரசு கடந்த 23-ந்தேதி தடை உத்தரவு பிறப்பித்தது.

கால் நடைகளை விற்பனை செய்யவும், வாங்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கேரளா, கர்நாடகம், புதுச்சேரி மாநில அரசுகளும் மேகாலயா உள்ளிட்ட வட கிழக்கு மாநில அரசுகளும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது மாநில அரசுகளின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. எனவே நாங்கள் அமல்படுத்த மாட்டோம் என்று அந்த மாநில முதல்-மந்திரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த சட்டத்தை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் மத்திய அரசின் உள்துறை செயலாளர், சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து சென்னையில் இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை மாவட்டம் முழுவதும் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் காலையிலேயே வந்து கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு இருந்தனர்.

மு.க.ஸ்டாலின் காலை 9.45 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தார். அவர் வந்ததும் ஆர்ப்பாட்டம் தொங்கியது.

மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் தடை உத்தரவை கண்டித்தும், இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத தமிழக அரசை கண்டித்தும் தி.மு.க.வினர் கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு வரவேற்று பேசினார். பேராயர் எஸ்றா சற்குணம், சுப.வீரபாண்டியன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது மத்திய அரசு உடனடியாக தனது உத்தரவை திரும்ப வேண்டும் என்றார். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று தமிழக அரசை கண்டித்தும் பேசினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லிக் அப்துல் ரகுமான், தமிழ் மாநில தேசிய லிக் திருப்பூர் அல்டாப் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன் முன்னாள் அமைச்சர் த.மோ.அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், வாகை சந்திரசேகர், இ.கருணாநிதி, முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, கவிஞர் காசி முத்து மாணிக்கம், வரலட்சுமி மதுசூதனன் தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, வட்ட, பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News