போச்சம்பள்ளி அருகே சாக்கடை கால்வாயை தூர்வார கோரி பொதுமக்கள் சாலை மறியல்
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் கடந்த 2 ஆண்டுகளக்கு முன்பு பஞ்சாயத்து மூலம் கழிவுநீர் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது.
இந்த கால்வாய் கட்டியதில் இருந்து தூர்வார படாமல் குப்பைகள் மற்றும் கழிவு நீர் தேங்கி இருந்தது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி அதிகமாக காணப்பட்டது. மேலும் துர்நாற்றம் வீசியது.
கொசுத்தொல்லையால் அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தனர். அப்பகுதி மக்கள் சாக்கடை கால்வாயை தூர்வார கோரி பஞ்சாயத்து அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் கழிவுநீர் சாக்கடை கால்வாய்யை தூர்வார நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அந்த பணியை அவர்கள் சரிவர செய்யவில்லை. அப்போது மேலும் அந்த பகுதியில் கொசு தொல்லை அதிகமானது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போச்சம்பள்ளி 4 ரோடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகலவறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் உடனடியாக சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் மறியல் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.