செய்திகள்

திண்டுக்கல்-கொடைக்கானல் சென்ற பஸ்சை பாதி வழியில் நிறுத்தி விட்டு ஓடிய டிரைவர்: பயணிகள் தவிப்பு

Published On 2017-09-14 19:32 IST   |   Update On 2017-09-14 19:32:00 IST
திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு சென்ற பஸ்சை டிரைவர் பாதி வழியில் நிறுத்தி விட்டு ஓடியதால் பயணிகள் தவித்தனர்.
தேவதானப்பட்டி:

திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு அதிகாலையில் ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ்சை எடுக்கும் போதே டிரைவர் தாறுமாறாக ஓட்டினார். அதிர்ச்சியடைந்த பயணிகள் பஸ்சை ஒழுங்காக ஓட்டுமாறு எச்சரித்தனர்.

அப்போது அந்த பஸ் தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி காட்ரோடு பிரிவு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போதும் டிரைவர் பஸ்சை தாறுமாறாக ஓட்டினார். ஆத்திரமடைந்த பயணிகள் ஒன்று திரண்டு டிரைவர் பக்கம் வந்து அவரை சரமாரியாக திட்டி தீர்த்தனர்.

உடனே டிரைவர் சாலை ஓரத்தில் பஸ்சை நிறுத்தினார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த வழியாக வந்த இன்னொரு அரசு பஸ்சில் ஏறி சென்று விட்டார். இதனால் பயணிகள் என்ன செய்வது என தவித்தனர்.

இது குறித்து பயணிகள் பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். நாங்கள் இப்போதே கொடைக்கானல் செல்ல வேண்டும் என ஆவேசப்பட்டனர். உடனடியாக கண்டக்டர் போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். சுமார் 2 மணி நேரம் கழித்து மாற்று டிரைவர் வந்த பிறகு பஸ் கொடைக்கானல் புறப்பட்டு சென்றது.

இதனால் பயணிகள் 2 மணி நேரம் பஸ்சில் தவித்தனர். இது குறித்து பயணிகள் கூறுகையில், பஸ் புறப்பட்ட நேரத்தில் இருந்தே டிரைவர் கண்மூடித்தனமாக பஸ்சை ஓட்டினார். நாங்கள் பல முறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. அதனால்தான் டிரைவரிடம் வாக்குவாதம் செய்தோம் என்றனர்.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரியிடம் கேட்ட போது பஸ்சை ஓட்டி வந்த டிரைவருக்கு ஏற்கனவே உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. சம்பவத்தன்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பஸ்சை இது போன்று ஓட்டியுள்ளார். எனவேதான் பஸ்சை நிறுத்தி விட்டு மற்றொரு பஸ்சில் ஏறி வத்தலக்குண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் என்றார்.

Similar News