செய்திகள்

ரே‌ஷன் சர்க்கரை விலை உயர்வுக்கு தினகரன் கண்டனம்

Published On 2017-10-29 16:47 IST   |   Update On 2017-10-29 16:47:00 IST
ரே‌ஷன் சர்க்கரை விலை உயர்வுக்கு அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ரே‌ஷன் கடைகளில் விற்கப்படும் சர்க்கரையின் விலை நவம்பர் மாதம் முதல் ரூபாய் 13.50-ல் இருந்து 25 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது மட்டுமல்லாமல், நியாயவிலைக் கடைகளின் நோக்கத்தையே சீரழித்துள்ளது.

வெளிச் சந்தையைக் காட்டிலும் குறைவான விலை கொடுத்து பொருட்களை பொது மக்கள் வாங்கிக் கொள்ளும் நிலையினை மாற்றி, வெளிச்சந்தை அளவிற்கு பொருட்களின் விலையை ஒவ்வொன்றாக மெதுவாக உயர்த்தினால், பிறகு நியாய விலைக் கடைகளின் நோக்கம் தான் என்ன?

ரே‌ஷன் பொருட்களை ஏழைகள் கைக்கு எட்டாக் கனியாக்கிவிட்டு, விரைவில் ரே‌ஷன் கடைகளுக்கு மூடு விழா நடத்தும் நாளை நோக்கி இந்த அரசு விரைவாக சென்று கொண்டிருக்கிறது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

நவம்பர் மாதம் முதல் சர்க்கரை விலை 25 ரூபாய் உயர்த்தப்படும் என்ற எடப்பாடி அரசின் அறிவிப்பை மக்கள் நலன் கருதி திரும்பப் பெற வேண்டும். நியாய விலைக் கடைகளில் சர்க்கரை விலையை உயர்த்திய இந்த அரசு, மக்கள் மனநிலையை உணர வேண்டும்.

எடப்பாடியை பொறுத்த வரை ஆட்சி என்பது பதவிக்கு தொடர்புடையதே தவிர, பொது மக்களுக்கு அப்பாற்பட்டது என்ற புதிய இலக்கணத்தோடு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். மக்களை மறந்துவிட்டு ஆட்சி செய்யும் இவர்களை ஆட்சியில் இருந்து வழியனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News