செய்திகள்

வைகை அணையில் தேக்குவதற்காக பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

Published On 2017-10-29 22:55 IST   |   Update On 2017-10-29 22:55:00 IST
வைகை அணையில் தண்ணீர் தேக்குவதற்காக பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நவம்பர் 1-ந் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 900 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் இருப்பை பொருத்து 6739 மி.கன அடி நீர் திறக்கப்படும் என அறிவித்தார்.

இதன்மூலம் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள 45,041 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். நீர்மட்டம் உயராததால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வைகை அணையில் தண்ணீர் தேக்குவதற்காக பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 1000 கன அடிநீர் திறக்கப்பட்டது. இன்று 1200 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணைக்கு 1204 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.90 அடியாக உள்ளது.

வைகை அணை நீர்மட்டம் 54.41 அடியாக உள்ளது. அணைக்கு 1050 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.75 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 120.68 அடியாக உள்ளது. 60 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 13.4, தேக்கடி 26.2, மஞ்சளாறு 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Similar News