செய்திகள்

எஸ்.வி.சேகரிடம் சம்மன் கொடுக்கப்பட்டது - எதிர்ப்பை சமாளிக்க பலத்த பாதுகாப்பு

Published On 2018-06-16 15:14 IST   |   Update On 2018-06-16 15:14:00 IST
வருகிற 20-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக எஸ்.வி.சேகரிடம் சம்மன் கொடுக்கப்பட்டது. எதிர்ப்பை சமாளிக்க அல்லிகுளம் கோர்ட்டு வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
சென்னை:

காமெடி நடிகரும், பா.ஜனதா பிரமுகருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

அதற்கு மாறாக எஸ்.வி.சேகருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எஸ்.வி.சேகரை கைது செய்ய கோரி போராட்டங்களும் நடைபெற்றன.

கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக எஸ்.வி.சேகர் அளித்த முன்ஜாமீன் மனுக்கள் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் போலீசார் சென்ட்ரல் அருகே உள்ள எழும்பூர் அல்லிகுளம் கோர்ட்டில் எஸ்.வி.சேகர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து வருகிற 20-ந்தேதி எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

இதற்கான சம்மனை வழங்குவதற்காக மயிலாப்பூரில் உள்ள எஸ்.வி.சேகரின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். எஸ்.வி.சேகர் சம்மனை வாங்க மறுத்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அவரது வீட்டில் சம்மன் வழங்கப்பட்டது. இதனை ஏற்று எஸ்.வி.சேகர் 20-ந்தேதி கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜர் ஆவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அல்லிகுளம் கோர்ட்டு வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்தே அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே 20-ந்தேதி அவர் கோர்ட்டில் ஆஜராகும் போது பலத்த எதிர்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News