செய்திகள்

கொடைக்கானலில் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

Published On 2019-04-01 10:11 GMT   |   Update On 2019-04-01 10:11 GMT
கொடைக்கானலில் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடைக்கானல்:

சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சீசன் காலத்தில் அதிக கூட்டம்கூடும் என்பதால் கொள்ளை கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது. வெளியூர்களில் இருந்து பைக், கார்களை திருடி வந்து கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் பணம் பறிக்கின்றனர். சிக்கிக் கொண்டால் வாகனங்களை விட்டு விட்டு தப்பி செல்கின்றனர். திருட்டு வாகனங்கள் என்பதால் கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் உள்ளது.

கொடைக்கானலை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கே.ஆர்.ஆர். கலையரங்கம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 4 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றனர்.

இது குறித்து முனியாண்டி கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முனியாண்டியிடம் பணம் பறித்த 4 வாலிபர்கள் அதே பகுதியில் சுற்றி திரிந்துள்ளனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். சுதாரித்த போலீசார் அவர்களை விரட்டினர். இதில் 2 பேர் மட்டுமே சிக்கினர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பைசூல் (வயது19) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தியை போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Similar News