செய்திகள்

சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் - தொற்று நோய் பரவும் அபாயம்

Published On 2019-04-04 23:09 IST   |   Update On 2019-04-04 23:09:00 IST
எஸ்.புதூர் அருகே சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எஸ்.புதூர்:

எஸ்.புதூர் அருகே உள்ள புழுதிபட்டியில் இருந்து பொன்னமராவதி செல்லும் நெடுஞ்சாலையில் கே.புதுப்பட்டி உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இங்கு சாலையோரத்தில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகள், ஊசிகள் மற்றும் காலி மருந்து பாட்டில்களை கொட்டி சென்றுள்ளனர்.

இந்த வனப்பகுதியில் மான், முயல், காட்டெருமை போன்ற வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இது மட்டுமின்றி அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் கால்நடைகளான ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்கின்றனர்.

இதனால் வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கும், மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்படும் ஆடு, மாடுகளுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அது மட்டுமின்றி அந்த பகுதியில் செல்லும் மக்களுக்கு இவற்றினால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இது போன்று மருந்து கழிவுகளை மக்கள் நடமாடும் பகுதியில் ஆபத்தான முறையில் கொட்டுவது குற்றமாகும். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு இந்த மருந்து கழிவுகளை சாலையோரம் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மருத்துவ கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் முன்பு இவற்றை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு, மருந்துவ கழிவுகளை சாலையோரம் கொட்டிய நபர்கள் யார் என்று கண்டறிந்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Similar News