செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்
பெரம்பலூரில் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டமும், கையெழுத்து இயக்கமும் நடத்தினர்.
பெரம்பலூர்:
சாலை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை 13 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக அடிப்படையில் போராடும் சாலைப்பணியாளர்கள் மீது போலீசாரை ஏவிவிட்டு, இழிவு படுத்திய நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் மற்றும் தலைமை பொறியாளரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும். முதன்மை இயக்குனர் பொறுப்பில் பொறியாளரை நியமனம் செய்யாமல், ஐ.ஏ.எஸ். அதிகாரியை முதன்மை இயக்குனராக நியமிக்க வேண்டும். சாலை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளுக்கு உரிய ஆணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பெரம்பலூரில் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டமும், கையெழுத்து இயக்கமும் நடத்தினர்.
இதையடுத்து நேற்று அவர்கள் சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் வளாகத்தில் நூதன போராட்டமாக தங்களது கண், காது, வாயை கருப்பு துணியால் கட்டி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மணிவேல், மாவட்ட இணை செயலாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சி.சுப்ரமணியன், பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.