செய்திகள்
நகைக்கடை ஷட்டரில் போடப்பட்ட துளை வழியாக வெளியே வரும் வாடிக்கையாளர்கள்.

தானியங்கி கதவு மூடியதால் நகைக்கடை ‌ஷட்டரில் துளையிட்டு ஊழியர்கள் மீட்பு

Published On 2019-10-22 16:40 IST   |   Update On 2019-10-22 16:40:00 IST
தானியங்கி கதவு திடீரென மூடியதால் நகைக்கடை ‌ஷட்டரில் துளையிட்டு பெண்கள், ஊழியர்கள் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டனர்.

பள்ளிக்கரனை:

கவுரிவாக்கம், தாம்பரம், வேளச்சேரி சாலையில் பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மேலாளர் உள்பட 15 பேர் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கமாக தினமும் இரவு 9.30 மணி அளவில் ‌ஷட்டரை பாதி மூடி விட்டு அன்றைய கணக்கு வழக்குகளை சரிபார்த்து வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் கடையை ஊழியர்கள் மூடுவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் பெண் வாடிக்கையாளர்கள் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கடையில் நகை வாங்கிக்கொண்டிருந்தனர். கடை மூடப்படும் நேரம் என்பதால் காவலாளி ‌ஷட்டரை பாதியளவு மூடினார். அப்போது திடீரென ‌ஷட்டர் முழுவதும் மூடிக்கொண்டது. அதனை காவலாளி திறக்க முயன்றும் முடியவில்லை. தானியங்கி கதவு என்பதால் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் கடைக்குள் சிக்கிய ஊழியர்களும் பெண் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சேலையூர் போலீசார் மற்றும் தியணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ‌ஷட்டரில் துளையிட்டனர். இதை அடுத்து கடைக்குள் சிக்கி இருந்த ஊழியர்கள் மற்றும் பெண் வாடிக்கையாளர்கள் உள்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் 4 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் வெளியே வந்தனர். இதன் பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

Similar News