செய்திகள்
கைது

பொள்ளாச்சியில் போலி சித்த மருத்துவர் கைது

Published On 2019-12-19 09:53 GMT   |   Update On 2019-12-19 09:53 GMT
பொள்ளாச்சியில் போலி சித்த மருத்துவர் மாரிமுத்துக்குமாரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி பகுதியில் போலி சித்த மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக கோவை கலெக்டருக்கு புகார் வந்தது.

இதனையடுத்து மாவட்ட சித்த மருத்துவ இயக்குனர் தனம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா உள்ளிட்ட குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி., காலனியில் வீட்டிலேயே சித்த மருத்துவம் பார்க்கும் மாரிமுத்துக்குமார், (வயது 60) என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, மாரிமுத்துக்குமார் சித்த மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவம் குறித்து சில நிறுவனங்கள் நடத்தும் கல்வித்திட்டங்களில் சான்றிதழ்கள் பெற்றுள்ளது தெரிய வந்தது.

அவரது வீட்டில் பல்வேறு மூலிகை மற்றும் சித்த மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. சிறுநீரக கல் அடைப்பு, மூலம், குழந்தையின்மை, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர் மருத்துவம் பார்த்து வந்துள்ளதும் தெரியவந்தது.

அரசு அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்றதற்கான சான்று இல்லாததால் மகாலிங்கபுரம் போலீசார் மாரிமுத்துக்குமாரிடம் விசாரணை நடத்தினர். அவரது வீட்டுக்கு, வருவாய் துறையினர், ‘சீல்’ வைத்தனர்.

மாரிமுத்துக்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தியத்தில் அவர் பி.ஏ. படித்திருப்பதும், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. திருச்சியில் செயல்பட்டு வரும் குருகுலத்தில் 6 மாதம் மட்டுமே சித்த மருத்துவ பயிற்சி பெற்று இந்த பகுதியில் பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்ததை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து மாரிமுத்துக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருடன் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அசோக் கார்த்திக் என்பவர் இணைந்து மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Similar News