செய்திகள்
விஜய பிரபாகரன்

ரஜினியும், கமலும் நடிகர் சங்க தேர்தலை கூட சந்தித்தது இல்லை- விஜய்காந்த் மகன்

Published On 2020-03-02 10:50 IST   |   Update On 2020-03-02 13:25:00 IST
ஜாம்பவான்களாக உள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிகர் சங்க தேர்தலில் தனித்தோ இணைந்தோ சந்திக்கவே இல்லை என்று விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

சென்னை:

ஆலந்தூர் மேற்கு பகுதி தே.மு.தி.க சார்பில் சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் தேமுதிக கொடி நாள் விழா நடந்தது.

விழாவில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சைக்கிள், பெண்களுக்கு தையல் மி‌ஷன், அயர்ன்பாக்ஸ், ஹெல்மெட், புடவைகளை வழங்கினார்.

விழாவில் விஜய பிரபாகரன் பேசியதாவது:-

விஜயகாந்த் சூப்பரா, கெத்தா, ஸ்டைலாக இருக்கிறார். அத்திவரதர் வந்து எப்படி பிரளயம் ஏற்பட்டதோ அதுபோல் தமிழக அரசியலில் விஜயகாந்தின் வருகையின் போது ஒரு பிரளயமே இருக்கும். குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். விடுபட்ட நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் வர போவதால் தைரியமாக இருக்க வேண்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் தே.மு.தி.க.விற்கு இனி ஏறுமுகம் தான். இத்தேர்தலின் வெற்றியை விஜயகாந்த்திடம் சமர்ப்பிக்க வேண்டும். 2021-ல் சட்டமன்ற தேர்தல் வரும் போது எல்லா தொகுதிக்கும் வந்து எழுச்சியை உருவாக்குவார். சிம்மாசனத்தில் விஜயகாந்த்தை உட்கார வைக்க பாடுபடுவோம்.

 


விஜயகாந்த் மகனாக வர வேண்டும் என்பதில்லை. தொண்டர்களுடன் தொண்டனாக இருக்கவே வந்துள்ளேன். தொண்டர்களையும் கோட்டைக்கு அனுப்ப வேண்டும் என்பதே லட்சியம். தே.மு.தி.க. வெற்றியையும் தோல்வியையும் சந்தித்துள்ளது. சக்கரம் போல் சுழன்று இனி வெற்றி பெறுவோம். வெற்றிக்கான காலம் வருகிறது. யாரும் தைரியத்தை மட்டும் விட்டுவீட்டாதீர்கள். நீங்கள் இருப்பதால் தான் நாங்கள் இருக்கிறோம்.

நாட்டிற்கு ஒரு நல்ல தலைவர் தேவை. 2005-ல் தே.மு.தி.க. அறிவித்த திட்டத்தை ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி நிறைவேற்றினால் பாராட்டுகிறீர்கள். தே.மு.தி.க. சரியான நிலையை எடுக்கவில்லை என்று எங்களை குறை சொல்லாதீர்கள். மக்கள் சரியான நிலையை எடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். தலைவரை தேர்ந்து எடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுடையது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு விஜய பிரபாகரன் கூறியதாவது:-

தே.மு.தி.க ஆரம்பித்த போதே தனித்து போட்டியிட்ட கட்சி. அதனால் தேர்தல் நேரத்தில் கட்சியின் நிலைப்பாட்டை கட்சி தலைவர், பொருளாளர் மற்றும் கட்சித் தலைமை அறிவிக்கும். கூட்டணியாக இருந்தாலும் தனித்து போட்டியிடுவதாக இருந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

ராஜ்யசபா உறுப்பினர் குறித்து அதிமுகவிடம் பேசப்பட்டதாக கட்சி பொருளாளர் தெளிவாக கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியும் இது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.

ராஜ்யசபா உறுப்பினர் சீட்டை கேட்டு விட்டோம். இனி என்ன நடக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒப்பந்தம் போடப்பட்ட போது என்ன பேசப்பட்டது என்பது அவர்களுக்கு தெரியும். அ.தி.மு.க, தே.மு.தி.க தலைமை பேசினால் மக்களுக்கு சரியாக போய் சேரும். ஆளாளுக்கு பேசினால் தேவையில்லாத குழப்பம் சர்ச்சை தான் ஏற்படும்.

ஜாம்பவான்களாக உள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிகர் சங்க தேர்தலில் தனித்தோ இணைந்தோ சந்திக்கவே இல்லை. மக்கள் மன்றத்தில் தேர்தலில் நடிகர்கள் யார் வேண்டுமானாலும் வந்து ஜெயிக்கலாம். ஆனால் நல்ல மனசு இருந்து மக்களுக்கு ஏதாவது செய்திருக்க வேண்டும். இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது கேள்விக் குறியாக உள்ளது.

விஜயகாந்த் செய்துள்ளதை நேரில் பார்த்துள்ளேன். ரஜினி, கமல் சொல்வது போல் நடக்காது. 2 பேரும் சேர்ந்து செய்தால் செய்யட்டும் அது அவர்களுடைய முடிவு. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கட்சி பொருளாளர் தெளிவாக சொல்லிவிட்டார். நான் ஒரு கருத்தை சொல்லி கட்சிக்குள் தேவையில்லாத சர்ச்சையாகும். பொருளாளர் சொன்னது தான் கட்சியின் கருத்தாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News