செய்திகள்
தீ

பாகூர் அருகே வீடு, கடை, ஓட்டலில் திடீர் தீ

Published On 2020-06-08 11:58 IST   |   Update On 2020-06-08 11:58:00 IST
பாகூர் அருகே வீடு, கடை, ஓட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகூர்:

பாகூர் அருகே உள்ள குருவிநத்தம் மேலண்ட வீதியை சேர்ந்தவர் ஞானவேலு (வயது 42). தனது வீட்டிலேயே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது சகோதரர் முத்து அதே இடத்தில் சிறிய ஓட்டல் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ஞானவேலுவின் வீடு மற்றும் கடை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்குள் முத்துவின் ஓட்டலுக்கும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து பாகூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து வீடு, கடை மற்றும் ஓட்டலில் பிடித்த தீயை அணைத்தனர். அதற்குள் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பாகூர் பகுதியில் கடந்த சில நாட்களாக குறைந்த மின்னழுத்த பிரச்சினை இருந்து வருகிறது. இதன் காரணமாக ஞானவேலு வீடு, கடை தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்து குறித்து அறிந்து தனவேலு எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து ஞானவேலு, முத்து ஆகியோருக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார். 

Similar News