செய்திகள்
கொடுமுடியில் சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
கொடுமுடியில் சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடுமுடி:
ஈரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36). கூலி தொழிலாளி. இவர் கொடுமுடி பெரியவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகளான 16 வயது சிறுமியை கடந்த மாதம் 27-ந் தேதி ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சிறுமியின் தந்தை கொடுமுடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரையும், கடத்தப்பட்ட சிறுமியையும் தேடி வந்தார்கள்.
இந்த நிலையில், நேற்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் செந்தில்குமாரை கண்டுபிடித்த போலீசார், சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்கள். பின்னர் சிறுமி அவருடைய தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சிறுமியை கடத்தியதாக மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா போக்சோ சட்டத்தில் செந்தில்குமாரை கைது செய்தார்.