செய்திகள்
அதிமுக

அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை உறுதி செய்வதில் சிக்கல் நீடிப்பு

Published On 2021-02-05 13:22 IST   |   Update On 2021-02-05 13:22:00 IST
20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் குழு பா.ம.க. குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு ஆணையத்தை அரசு நியமித்துள்ளது.

தனி ஒதுக்கீடு இப்போது வழங்காவிட்டாலும் உள் ஒதுக்கீடாவது வழங்கியே தீரவேண்டும் என்பதில் டாக்டர் ராமதாஸ் தீவிரமாக இருக்கிறார்.

இது தொடர்பாக அமைச்சர்கள் குழு டாக்டர் ராமதாசுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.


இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை என்ற அடிப்படையில் அமைச்சர்கள் குழு பா.ம.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த அந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாட்டு எட்டவில்லை.

தமிழகத்தில் மிகவும் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு 20 சதவீதமாக உள்ளது.

மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் வன்னியர், அம்பலக்காரர், ஆண்டிப் பண்டாரம், போயர், இசை வேளாளர், குலாலர், குறும்பர், மருத்துவர், மீனவர், வேட்டைக்காரர், வேட்டுவ கவுண்டர் உள்பட 41 சாதிகள் உள்ளன. இதில் எந்த சாதிக்கும் தனியாக உள் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

மிகவும் பிற்பட்டோர் பட்டிலில் உள்ள இனத்தவர்களை சாதி, தொழில், வறுமை, சமூக பிற்பட்ட நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மிகபிற்பட்டோர் மற்றும் மிக மிக பிற்பட்டோர் என்று வகைப்படுத்தி உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று அரசின் பிற்பட்டோர் குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளது.

அந்த வகையில் உள் ஒதுக்கீடு பிரச்சனைக்காவது தீர்வு கண்டால் மட்டுமே கூட்டணி பற்றி பேச முடியும் என்று டாக்டர் ராமதாஸ் தெளிவாக கூறிவிட்டார்.

இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் 10 சதவீதம் வரை உள் ஒதுக்கீடு வழங்க தயாராக இருந்துள்ளார்கள்.

ஆனால் பா.ம.க. தரப்பில் அதை ஏற்கவில்லை. இரட்டை இலக்கத்தில் இட ஒதுக்கீடு சதவீதம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்ட பிறகே கூட்டணி பற்றிய பேச்சை தொடங்கமுடியும் என்று ராமதாஸ் தெளிவுப்படுத்தி இருக்கிறார். இதனால் கூட்டணியை உறுதிப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்படுகிறது.

Similar News