செய்திகள்
தஞ்சை ரெயிலடியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயிலடியில் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோவிந்தராஜு, செயலாளர் வீரையன், பொருளாளர் மதியழகன், மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஏலுப்பட்டி டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபான பாட்டில்கள் கொடுக்க மறுத்த விற்பனையாளர் ஆறுமுகம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். கரந்தை சி.ஆர்.சி. டெப்போ அருகே டாஸ்மாக் கடையில் அனுமதியின்றி பார் நடத்துபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பார்களில் பறிமுதல் செய்யப்படும் மதுப்பாட்டில்களுக்கு டாஸ்மாக் ஊழியர்களை பொறுப்பாக்கக்கூடாது. இதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட மேற்பார்வையாளருக்கு அதே கடையில் பணி வழங்க வேண்டும். சுழற்சி முறையில் பணிமூப்பு அடிப்படையில் பணிமாறுதல் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு ஏற்ப ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, தரைக்கடை சங்க மாவட்ட துணைத் தலைவர் குருசாமி, மாவட்ட செயலாளர் மில்லர்பிரபு, பொருளாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.