செய்திகள்
வெடிவிபத்தினால் தரைமட்டமான வீடுகள்

வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து- பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Published On 2021-06-22 08:08 IST   |   Update On 2021-06-22 08:08:00 IST
வெடிவிபத்தின் காரணமாக அந்த வீட்டில் எரிந்த தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதில் 15 பேரின் வீடுகள் சேதம் அடைந்தன.
சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியில் கலைஞர் காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது45). இவர் தனது வீட்டில் ஆட்களை வைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்தார். அவரது வீட்டையொட்டி அக்கம்பக்கத்தில் பல வீடுகள் உள்ளன.

நேற்று காலை 8 மணிக்கு அவர் வீட்டில் வழக்கம்போல் பேன்சி ரக வெடி தயாரிக்கும் பணி நடைபெற்றது.

இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த சூர்யா (38), அப்போலோ என்பவரின் மனைவி செல்வமணி (35), காளீஸ்வரன் என்பவரின் மனைவி கற்பகவள்ளி (30) ஆகிய 3 பேர் ஈடுபட்டு இருந்தனர். அந்த நேரம் பார்த்து செல்வமணியை பார்க்க அவருடைய மகன் ரெகோபெயம் சல்மான் (5) அங்கு சென்றிருந்தான்.

அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் மொத்தமாக வெடித்து சிதறின.

இந்த விபத்தில் சிறுவன் ரெகோபெயம் சல்மான் உள்பட 4 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். செல்வமணியின் உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. இதற்கிடையே வெடிவிபத்தின் காரணமாக அந்த வீட்டில் எரிந்த தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதில் 15 பேரின் வீடுகள் சேதம் அடைந்தன. இதில் அந்த வீடுகளில் இருந்த 3 பேர் காயம் அடைந்தனர். தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த கற்பகவள்ளி 4 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News