உள்ளூர் செய்திகள்
முன்பதிவில்லாத பெட்டிகளுடன் கோவை வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கம்
ரெயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
கோவை:
கோவையில் இருந்தும் கோவை வழியாகவும் முன்பதிவு செய்யப்பட்ட ரெயில் இயக்கப்பட்டு வந்தது. பின்னர் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகிறது.
இதைதொடர்ந்து கோவை வழித்தடத்தில் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் விரைவு ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை-திருப்பதி விரைவு ரெயில் (எண்: 22616) 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் பிப்ரவரி 8-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கோவையில் இருந்து 6 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக திருப்பதிக்கு மதியம் 1.20-க்கு சென்றடையும்.
எர்ணாகுளம்- பெங்களூர் இன்டர்சிட்டி விரைவு ரெயில் (எண்:12678) 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10-க்கு புறப்பட்டு திருச்சூர், பாலக்காடு வழியாக கோவைக்கு மதியம் 12.50-க்கு வந்தடைகிறது. இங்கிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பெங்களூருக்கு மாலை 7.25 மணிக்கு சென்றடைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.