உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கோவில் திருவிழாக்களுக்கு அனுமதியால் பூவோடு தயாரிப்பில் தொழிலாளர்கள் ஆர்வம்

Published On 2022-01-30 04:19 GMT   |   Update On 2022-01-30 04:19 GMT
இனிவரும் மாதங்களில் ஆங்காங்கே உள்ள மாரியம்மன் கோவில்களில் தேர்த்திருவிழா நடத்த வாய்ப்புள்ளது.
உடுமலை:

உடுமலை அடுத்த எஸ்.வி., புரம், எரிசனம்பட்டி, காந்திநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் மண்பானை தயாரிப்பு பணியை பாரம்பரியமாக மேற்கொண்டு வருகின்றனர். 

இதுதவிர கோவில் திருவிழாக்களுக்கான மண் சிலைகள், அகல்விளக்கு உருவாரங்கள் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. இத்தொழிலுக்கு மணல் கலந்த களிமண் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

வழக்கமாக கோவில் திருவிழா மற்றும் கோடை காலத்தை முன்னிட்டு  மண்பானைகள் தயாரிப்பு மும்முரமாக இருக்கும். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல், ஊரடங்கு, கோவில்களில் பக்தர்களுக்கு தடை போன்ற காரணங்களால் பூவோடு மற்றும் மண்பானை தயாரிப்பு பணி பாதிப்படைந்தது. 

தற்போது பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தியும், பக்தர்களுக்கு வழிபட அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளதால் திருவிழா நடத்த தடை இருக்காது என  ஊர்ஜிதமாகியுள்ளது. அவ்வகையில் பூவோடு தயாரிப்பில் தொழிலாளர்கள் ஆர்வம் காட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மண்பாண்ட தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘இனிவரும் மாதங்களில் ஆங்காங்கே உள்ள மாரியம்மன் கோவில்களில் தேர்த்திருவிழா நடத்த வாய்ப்புள்ளது. 

அதிக அளவில் பூவோடுகள் தயாரிக்கப்படும். மேலும் ஊரடங்குக்கு சாத்தியமில்லை என்பதால் மண்பானைகளும் அதிக அளவில் தயாரிக்கப்படும் என்றனர்.

Similar News