உள்ளூர் செய்திகள்

பனியன் ஆடைகளை அனுப்பும் திருப்பூர் கொரியர் நிறுவனத்தில் தீ விபத்து

Published On 2024-12-21 11:39 GMT   |   Update On 2024-12-21 11:39 GMT
  • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
  • கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் அடைந்து இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மணிய காரம்பாளையம் பகுதியில் பின்னலாடைகளை பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பும் கொரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் கொரியர் நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆன்லைன் ஆர்டர்களுக்கு ஏற்றவாறு அந்தந்த பகுதி வாரியாக அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை கொரியர் நிறுவன கட்டிடத்தின் ஒரு பகுதியில் திடீரென கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். இதையடுத்து தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியவில்லை. உடனே இது குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் முடியவில்லை. இதையடுத்து திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளியில் இருந்து மேலும் 4 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 5 டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.


இந்த தீ விபத்தின் காரணமாக கொரியர் நிறுவன கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது மட்டுமல்லாது கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் விரிசல் அடைந்து இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்காமல் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கட்டிடத்தின் பின்புறத்தில் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான நிட்டிங் , டைலரிங் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய நிலையில் அவற்றுக்கு தீ பரவாமல் இருக்கும் வகையில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் கொரியர் நிறுவனத்தில் இருந்த பல கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து சேதமாகின. இதனைப்பார்த்து ஊழியர்கள் கண்ணீர் சிந்தினர். தீ விபத்தால் அப்பகுதியில் 50 அடி உயரத்திற்கு கரும்புகை வெளியேறியது. இதனால் அப்பகுதி முழுவதும் மேகமூட்டம் போல் காணப்பட்டது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News