உள்ளூர் செய்திகள்
பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள் கட்டுப்பாட்டு மையம் அமைத்து 24 மணிநேரமும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள் கட்டுப்பாட்டு மையம் அமைத்து 24 மணிநேரமும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 66 பேர் கொண்ட பறக்கும் படை குழுவினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு, நாமக்கல் சேலம் மாவட்டங்களை இணைக்கும் கருங்கல் பாளையம் சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் சுரேஷ் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடியில் வரும் ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி அங்குலம் அங்குலமாக சோதனை செய்து வருகின்றனர்.
சோதனையை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ் காண்பித்து அனுப்பி வைக்கின்றனர். பிற வாகனங்களில் பணம், பரிசுப் பொருட்கள், ஆயுதங்கள், கட்சிகொடி, தோரணங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏதேனும் உள்ளதா? வாகனம் எதற்காக வருகிறது. எங்கு செல்கிறது என்று கேள்வி கேட்டு விசாரணை செய்கின்றனர்.
இதேப்போல் பவானி லட்சுமி நகர் சோதனை சாவடி, நொய்யல் ஆறு சோதனை சாவடி, பண்ணாரி சோதனைச் சாவடி உள்பட பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் தங்களது சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும். மையத்தின் கட்டணமில்லா தொலை பேசி எண் 180042594890 வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்களை இந்த எண்ணில் தெரிவிக்கலாம்.
புகாரின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும். மாநகராட்சி வார்டுகள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு அனுமதி, ஒலிபெருக்கி அனுமதி இந்த மையத்தின் மூலமே வழங்கப்படும். தேர்தல் பற்றிய சந்தேகங்களுக்கு இந்த எண்ணில் விளக்கம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.