உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் 1236 மையங்களில் 1.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து விநியோகம் - ஆசாரிபள்ளத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரியில் 1236 மையங்களில் 1.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து விநியோகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆசாரிபள்ளத்தில் தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரி:
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 1236 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
நாகர்கோவில் ஆசாரி பள்ளத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். கலெக்டரின் குழந்தைக்கு முதலில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மீனாட்சி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பிரகலாதன், கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசிலியான், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி ஆஸ்பத்திரிகள் என அனைத்து மையங்களிலும் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு வசதியாக ரெயில் நிலையம் வடசேரி பஸ் நிலையம் அண்ணா பஸ் நிலையத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறை மற்றும் காந்தி மண்டபம் பகுதிகளிலும் நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
மலைப்பகுதியில் உள்ள தோட்ட மலை தச்சமலை பகுதியில் உள்ள குழந்தை களுக்கு படகில் சென்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் பேச்சிப்பாறை அணையில் இருந்து படகில் சென்று சொட்டு மருந்தை வழங்கினார்கள்.
மாவட்டம் முழுவதும் சுமார் 1.34 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சொட்டு மருந்து வழங்கும் பணியில் 4950 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.