உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,222 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்-அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:
தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,222 முகாம்களில் 1,34,199 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று காலை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு 5 வயதிற் குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை வழங்கி தொடங்கி வைத்தனர். பின்னர் கீதாஜீவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 34 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 1,222 மையங்கள் அமைக்கப்பட்டு 5,300 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இன்று சொட்டு மருந்து கொடுக்க முடியாதவர்கள் நாளையும் செலுத்தி கொள்ளலாம்.
மேலும் வீடு, வீடாக சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். எனவே பொதுமக்கள் தவறாது தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மருத்துவக்கல்லூரி டீன் நேரு, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் 18 சிறப்பு குழுக்கள் மற்றும் 128 நடமாடும் குழுக்கள் மூலமாக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மருத்துவ பணியாளர்கள் சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி வருகின்றனர்.
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, 12 வட்டார சுகாதார நிலையங்கள், 60 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 262 துணை சுகாதார நிலையங்கள், 458 அங்கன் வாடிமையங்கள் மற்றும் 284 பள்ளிகளில் இன்று சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் 5,379 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.