களக்காடு அருகே விற்பனைக்கு கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் நூதன திருட்டு
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்தவர் காளிதாஸ் மகன் இளையராஜா (வயது19).
இவர் தனது மோட்டார் சைக்கிளை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் பதிவு செய்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள், ‘உங்கள் மோட்டார் சைக்கிளை நாங்கள் நல்ல விலைக்கு வாங்கி கொள்கிறோம். நாங்கள் இப்போது களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்தில் இருக்கிறோம். உடனடியாக உங்கள் மோட்டார் சைக்கிளை கொண்டு வாருங்கள்’ என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து இளையராஜா தனது மோட்டார் சைக்கிளை நல்ல விலைக்கு விற்பதற்காக களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரத்திற்கு கொண்டு சென்றார். சிதம்பராபுரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் மோட்டார் சைக்கிளை வாங்க வந்தவர்களும் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களிடம் இளையராஜா மோட்டார் சைக்கிளை காட்டி உள்ளார். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளனர். இளையராஜாவும் அவர்களிடம் மோட்டார் சைக்கிளை கொடுத்துள்ளார்.
அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்ட, மற்றொருவர் மோட்டார் சைக்கிளின் பின்புறம் ஏறி அமர்ந்து சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் வந்து விடுவார்கள் என்று இளையராஜா காத்திருந்தார். ஆனால் அவர்கள் அப்படியே மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் இளையராஜா கொள்ளையர்களுடன் பேசிய செல்போனும் இருந்தது. அந்த செல்போனுடனும் அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதனால் கொள்ளையர்கள் எந்த போனில் இருந்து பேசினார்கள் என்ற விபரமும் தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து இளையராஜா அந்த பகுதியில் உள்ள சிலரிடம், நூதன திருடர்களின் விபரத்தை கூறி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் யாருக்கும் அவர்களை பற்றி தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சினிமா காமெடி போல் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நூதன கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.