உள்ளூர் செய்திகள்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கல்

பேராவூரணியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா

Published On 2022-03-08 13:42 IST   |   Update On 2022-03-08 13:42:00 IST
பேராவூரணியில் ரூ.18 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா நாட்டாணிக்கோட்டை செந்தமிழ் நகரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
 
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா கோவி. செழியன், அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா வரவேற்றார்.
விழாவில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 31 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா, பல ஆண்டுகளாக சாலை வசதியின்றி இருந்த நரிக்குறவர் காலனி பகுதிக்கு தார்சாலையையும் திறந்து வைத்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது,

எந்த ஊருக்கு சென்றாலும் முதலில் நரிக்குறவர் காலனிக்கு சென்றீர்களா அவர்களது குறைகளை தீர்த்து வையுங்கள் என உரிமையோடு முதலமைச்சர் கேட்பார். இந்த பகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பாதை பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. பட்டா வழங்கப்பட்டுள்ளது. அடுத்து அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும். பள்ளி செல்லாத குழந்தைகளே இல்லை என்ற நிலை உள்ளது. நீங்கள் அனைவரும் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், முன்னாள் எம்.எல்.ஏ. ஏனாதி பாலசுப்ரமணியன், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், தாசில்தார் சுகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், ஒன்றிய கவுன்சிலர் குழ.செ. அருள்நம்பி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், இளங்கோவன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டாட்சியர் பிரபாகரன் நன்றி கூறினார்.

விழாவில் 31 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் ரூ.18 லட்சத்து 24 ஆயிரத்து 744 மதிப்பில் வழங்கப்பட்டது.

Similar News