உள்ளூர் செய்திகள்
மோர்தானா அணை அருகே சுற்றும் ஒற்றை யானையால் பீதி
மோர்தானா அணை அருகே சுற்றும் ஒற்றை யானையால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் வனச் சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இருப்பினும் அந்த யானைகள் கூட்டம் பல குழுக்களாகப் பிரிந்து தமிழக எல்லையோரம் உள்ள வனப்பகுதிக்குள் அருகே உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
இருப்பினும் வனத்துறையினர் விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகள் கூட்டத்தை அடர்ந்த ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.
நேற்று விடியற்காலை 2 யானைகள் தனகொடண்டபல்லி கிராமத்தில் உள்ள வெங்கடேசன், சின்னப்பன், சீனிவாசன் உள்ளிட்டோர் விளை நிலங்களுக்குள் புகுந்து ஏராளமான நெற்பயிரையும் மா மரங்களை சேதப்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணன்பாபு தலைமையில் வனவர் மாசிலாமணி உள்ளிட்ட வனத்துறையினர் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி யடித்தனர்.
குடியாத்தம் அடுத்த சைனகுண்டா பகுதியில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது. அதன் சற்று தொலைவில் காவல்துறையின் சோதனை சாவடி உள்ளது. இதன் அருகே யானைகள் வந்து பிளிறியபடி இருந்தது. இதனால் சோதனை சாவடியில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர்.
மேலும் கிராமத்திற்கு அருகே யானைகள் முகாமிட்டு தொடர்ந்து பிளிறியபடி இருந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
கடந்த சில தினங்களாக மாலை 6 மணி முதலே ஒற்றை யானை ஒன்று மோர்தானா கிராமத்திற்கு செல்லும் சாலையில் மூங்கில் புதர் அருகே முகாமிட்டு சுற்றி வருவதாகவும் சாலையின் குறுக்கே பல நிமிடங்கள் நின்று பிளிறியபடி இருக்கிறது. இதனால் அந்த கிராமத்திற்கு செல்லும் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
இதனிடையே வனத்துறையினர் மோர்தானா கிராமத்திற்குச் செல்லும் வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லுமாறும் தனியாக செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.