உள்ளூர் செய்திகள்
தருவைகுளம் உப்பு தண்ணீரால் தென்னை, பனை மரங்கள் வாடி வதங்குவதாக புகார் - கலெக்டருக்கு மனு
தருவைகுளம் உப்பு தண்ணீரால் தென்னை, பனை மரங்கள் வாடி வதங்குவதாக உடன்குடி வட்டார தென்னை, பனை விவசாயிகள் நல சங்கம் சார்பில் கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர்.
உடன்குடி:
உடன்குடி வட்டார தென்னை, பனை விவசாயிகள் நல சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்ததால், உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்களும், குட்டைகளும் முழுமையாக நிரம்பி, மறுகால் பாய்ந்தது.
கருமேனி ஆற்றிலும் தண்ணீர் வந்தது. மேலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள அனை த்துகுளங்களும் கண்டுபிடிக்கபட்டு பராமரித்து முழுமையாக தண்ணீர் நிரப்பப்பட்டது.
தற்போது அனைத்து குளங்களிலும் நாளுக்கு நாள் தண்ணீர் குறைந்து கொண்டே வருகிறது. சில குளத்தில் தண்ணீர் இல்லை. ஆனால் இந்த ஆண்டு மழைக்காலத்தில் முழுமையாகநிரம்பிய குலசேகரன்பட்டினம் தருவைகுளத்தில் உடன்குடி அனல் மின் நிலையம் சார்பில் அங்கு உள்ள ஏராளமான கழிவு உப்பு நீரை தருவைகுளத்தில் விட்டதால் தண்ணீர் முழுமையும் உப்பாகிவிட்டது.
கடல் தண்ணீர் போல நுறை பொங்கி காணப்படுகிறது. தற்போதும் உடன்குடி அனல்மின் நிலையம் சார்பில் கழிவுஉப்புநீர் இக்குளத்திற்கு வருவதால் குளத்தில் தண்ணீர் வற்றாமல் அப்படியே இருக்கிறது.
மேலும் குளத்தை சுற்றி உள்ள தென்னை மற்றும் பனைமர தோட்டங்களில் உப்பு நீர் தேங்கி நிற்பதால் தென்னை மற்றும் பனை மரங்கள் உருக்குலைந்து வாடி வதங்கிப் போய் நிற்கிறது.
அதனால் அனல் மின் நிலையத்திலிருந்து தருவைகுளத்திற்கு வரும் கழிவு உப்பு தண்ணீரை முழுமையாக கட்டுப்படுத்தி, தருவைகுளத்தில் மழைகால தண்ணீரை தேக்கி வைத்து 1000 கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.