உள்ளூர் செய்திகள்
.

சின்னகொத்தூரில் பெண்ணின் நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

Published On 2022-03-08 16:50 IST   |   Update On 2022-03-08 16:50:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்ணின் நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு
வேப்பனப்பள்ளி:

சின்னகொத்தூரில் நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவும், அரசு அருங்காட்சியகமும் இணைந்து சின்ன கொத்தூரில் ஆய்வு மேற்கொண்டது. அங்கு சாக்கியம்மாள் கோவில் என்ற இடத்தில் மேற்கொண்ட ஆய்வில், அக்கோவிலில் இருந்த உடைக்கப்பட்ட சாஸ்தா சிலையும், அருகே உள்ள இடங்களையும் ஆய்வு செய்தபோது, மண்ணில் ஒரு நடுகல் புதைந்திருப்பது தெரியவந்தது. அந்த இடத்தினை ஊர்மக்கள் உதவியுடன் தோண்டி நடுகல்லை வெளியே எடுத்தனர். 

இது குறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-&

இந்த நடுகல் 16-&ம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. நடுகல்லில் உள்ள பெண், தோளில் மாலையுடனும், பிற அணிகலன்களுடனும், ஒரு விரலை உயர்த்தி காட்டிய நிலையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது, இப்பெண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தெரிய வருகிறது.

அப்பெண்ணை ஒரு ஆண் வீரன் வெட்டுகிறான். அவனும் போரிடும் நிலையில் இல்லை என்பது தோற்றத்தில் இருந்து தெரிய வருகிறது. நரபலி கொடுத்தபின் இவரை தெய்வமாக அந்த பகுதி மக்கள் வழிபட்டு இருக்கிறார்கள் என்பது இந்த நடுகல் அமைப்பில் இருந்து தெரிய வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, சிவன் கோவில் புனரமைப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு நடுகல் இதன் தோற்றத்தினை அப்படியே பெற்று இருந்ததுடன் அதில் கல்வெட்டும் காணப்பட்டது. அதில், “தீத்தமலை உடனே தலை வெட்டு” என்ற வாசகம் இடம்பெற்று இருக்கின்றது.

தீர்த்தம் என்ற இடம் இந்த இடத்தில் இருந்து, 4 கிலோ மீட்டர் தொலைவில் சிவன்கோவில் உள்ள இடம் ஆகும். தியாகத்தின் மறு உருவம் பெண் என்பதற்கான ஆதாரமாக, ஒரு வேண்டுதலுக்காகவோ, போருக்காகவோ, வேறு முக்கிய நிகழ்வுக்காகவோ இவர் தானாக நரபலிக்கு முன் வந்திருப்பது இந்த நடுகல் மூலம் தெரிய வருகிறது.

சாக்கியம்மாள் என்று இவர்கள் பெயர்வைத்திருப்பது தெருகூத்தின் வழிவந்ததாக இருக்கக் கூடும். ஆனால் இவருக்கு வேறு பெயர் இருந்திருக்கும். காலத்தின் மாற்றத்தில் இது செல்லியம்மன் என அழைக்கப்படுகிறது. தன் தலையை தானே அறுத்து பலியிடும் நவகண்ட சிற்பத்திலிருந்து இது வேறுபட்டது. இது தமிழகத்தின் நடுகல் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது  வரலாற்றுக் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், விஜயகுமார், ரவி, செல்வகுமார் மற்றும் ஊர்மக்கள் உடன் இருந்தனர்.

Similar News