உள்ளூர் செய்திகள்
ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன மற்றும் தவறவிட்ட 60 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் இன்று வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கப்படும்.
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பெருமளவு குற்றங்களை தடுக்க முடியும்.
வேலூர் மாவட்டம் அல்லேரி பீஞ்சமந்தை மலைகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தடுக்கப்பட்டுள்ளது. மீறி கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனம் திருந்தி வந்தால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கி தொழில் செய்ய உதவி செய்யப்படும். மலை கிராமங்களில் நக்சலைட்டுகளை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
செல்போன்கள் பைக் திருட்டு குறித்து புகார் அளித்த 30 நிமிடங்களுக்குள் போலீசார் சிஎஸ்ஆர் அல்லது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.மீறினால் போலீசார் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாயும்.
3 மாதங்களில் திருடுபோன 60 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 100 செல்போன்கள் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.. மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள 42 போலீஸ் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
வேலூர் ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். தினமும் நான் அந்த வழியாக அலுவலகத்திற்கு வந்து செல்வேன்.
ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஏ.டி.எஸ்.பி சுந்தரமூர்த்தி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி பூபதி ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.