உள்ளூர் செய்திகள்
குழந்தைகளுடன் ஆதார் மையங்களில் குவியும் பெற்றோர்கள்
ஆதார் மையங்களில், குழந்தைகளை திருப்பி அனுப்புவதால் ஆதார் பதிவு செய்ய முடியாமல் பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.
திருப்பூர்:
கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில்வி ரைவில் பள்ளிகள், நர்சரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்க இருக்கிறது. பள்ளி மாணவர் சேர்க்கைக்காக, ஆதார் அட்டை, ஜாதிச்சான்று, இருப்பிட சான்றிதழ் பெற, பெற்றோர் அலைமோதிக்கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக ஆதார் பதிவு செய்ய, குழந்தைகளுடன் பெற்றோர் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர். எந்தவொரு பள்ளியாக இருந்தாலும் ஆதார் அட்டை அவசியம் என்கின்றனர்.
மாணவர் சேர்க்கைக்கு ஆதார் பதிவு அவசியம். இதனால் தற்போது இருந்தே குழந்தைகள் கூட்டம் ஆதார் மையங்களில் அதிகரிக்க துவங்கிவிட்டது.
தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையங்களில், குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய இயலாது. ‘அப்டேட்’ மட்டுமே செய்ய முடியும் என திருப்பி அனுப்புகின்றனர்.
இதனால் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் செல்லுமாறு அறிவுறுத்துவதால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் பதிவு மையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
மாவட்ட நிர்வாகம், ஆதார் சேவை தடையின்றி கிடைக்க ஆவன செய்ய வேண்டும். அனைத்து தாலுகா ஆதார் மையங்களிலும், குழந்தைகளுக்கு ஆதார் பதிவிட உத்தரவிட வேண்டும்.
மேலும், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் அமைத்த ஆதார் மையங்களையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
கல்வியாண்டு துவங்கும் வரை கூடுதல் ஆதார் பதிவு மையங்களை நடத்த கலெக்டர் உத்தரவிட்டு, குழந்தைகளுக்கு சிரமமின்றி ஆதார் பதிவு செய்ய உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.