உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே 1,000 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அதிகாரியிடம் அறிவுறுத்தினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே திருக்கண்டேஸ்வரத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் பிரம்ம உற்சவ விழாவில் சிறிய அளவிலான தேரில் சாமி எழந்தருளி தேர்த்திருவிழா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 43 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து புதிய தேர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று முடிவடைந்தது.
தற்போது வருகிற ஜூன் 1-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று மாலை வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று காலை நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆணையாளர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல், கோவில் செயல் அலுவலர் மகாதேவி, நகராட்சி பணி மேற்பார்வையாளர் வாசு, கோவில் கணக்கர் சரவணன், கவுன்சிலர்கள் செல்வகுமார், மலையான் மற்றும் பலர் வருகிற ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ள தேர் வெள்ளோட்டத்தில் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பார்வையிட்டனர்.
பின்னர் முக்கிய மாட வீதியில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும், குண்டும், குழியுமான சாலைகள் இருக்கும் பட்சத்தில் சரி செய்யும் படியும், மின் பாதைகள் ஏதேனும் தாழ்வாக செல்கிறதா? பொதுமக்கள் அதிகளவில் திரண்டு தேர் வெள்ளோட்டத்திற்கு வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னென்ன செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் அதிகாரியிடம் அறிவுறுத்தினார்.