அடகு கடையில் கைவரிசை காட்டிய வாலிபர் கைது: 250 பவுன் நகை கொள்ளை வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு
- தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராமகிருஷ்ணன் நகையையும் கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டார்
- தெலுங்கானா, ஆந்திராவில் 7-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி சிவா தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன். இவர் மூலைக்கரைப்பட்டி பஜார் பகுதியில் ஒரு வணிக நிறுவனத்தின் மாடியில் அடகு கடை நடத்தி வந்தார். கீழ் தளத்தில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ந்தேதி அதிகாலையில் அடகு கடைக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்து ரூ. 3 லட்சம் பணம் மற்றும் 250 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக மூலைக்கரைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டி.வி.க்களை ஆய்வு செய்த போது மங்கி குல்லா அணிந்து வந்த மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து நெல்லை சரக டி.ஜ.ஜி. மூர்த்தி ஆலோசனையின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில் நாங்குநேரி டி.எஸ்.பி. பிரசன்னகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ராஜகுமாரி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ரெட்டார் குளத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் ராமகிருஷ்ணன் (வயது 35) என்பவர் இந்த கொள்ளையை நிகழ்த்தியதும், அவர் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 137 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் நாங்குநேரி கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி இன்று காலை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை அறிந்த ராமகிருஷ்ணனின் தாய் மீனாட்சி (65) விசாரணைக்கு பயந்து நேற்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவத்தில் ராமகிருஷ்ணன் ஈடுபட்டது எப்படி?. வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.
ராமகிருஷ்ணன் பல ஆண்டுகளாக தெலுங்கானா மாநிலத்தில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கே தன்னுடன் பணிபுரிந்த ஒரு இளம்பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் மீது தெலுங்கானா, ஆந்திராவில் 7-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
இவர் ஏற்கனவே மங்கி குல்லா அணிந்து நாசரேத் பகுதியில் திருட்டை நிகழ்த்தியதை அடிப்படையாக கொண்டு நடத்திய விசாரணையில் தற்போது அவர் சிக்கினார்.
இவர் திட்டமிட்டோ, கூட்டாளிகளோடு சேர்ந்தோ எங்கும் கொள்ளையடிக்க செல்வதில்லை. தனியாக சாதாரணமாக சென்று பூட்டிய வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு பின்னர் 1 வருடம் வரை தெலுங்கானாவில் போய் தங்கி கொள்வார். பின்னர் சொந்த ஊருக்கு வந்து மீண்டும் கைவரிசை காட்டி விட்டு சென்றுவிடுவதாக அவர் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அடகு கடையில் கொள்ளை அடிக்கும் நாளுக்கு முந்தைய நாள் கோவில் கொடை விழாவுக்காக அவர் சொந்த ஊர் வந்துள்ளார். வந்த இடத்தில் தான் அடகு கடையில் கொள்ளையடிக்க அவர் உள்ளே சென்றுள்ளார். அப்போது பணத்திற்கு அருகிலேயே லாக்கரின் சாவியும் இருந்துள்ளது.
அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராமகிருஷ்ணன் நகையையும் கொள்ளையடித்து கொண்டு சென்றுவிட்டார். அன்றைய தினமே அந்த நகைகளில் பாதியை தனது தாய் மீனாட்சியிடம் கொடுத்துவிட்டு மீதி நகைகளுடன் தெலுங்கானா சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு தனது வழக்குகளை நடத்தி வரும் தெலுங்கானாவை சேர்ந்த வக்கீலிடம் பாதி நகைகளை கொடுத்துள்ளார். இவ்வாறாக நகைகளை மேலும் 2 பேரிடமும் கொடுத்து விட்டு அவ்வப்போது அதனை வாங்கி விற்று சொகுசாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
மீனாட்சியிடம் கொடுத்த நகைகளை அவர் தனது மற்ற குழந்தைகளுக்கு பங்கு வைத்து கொடுத்துள்ளார். இதனை அறிந்த ராமகிருஷ்ணன் தனது தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த சம்பவங்கள் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே பல்வேறு துப்புகளின் அடிப்படையில் ராமகிருஷ்ணனை போலீசார் நெருங்கிய நிலையில் இந்த சம்பவமும் அவர்களது சந்தேகத்தை உறுதியாக்கியது. தொடர்ந்து அவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய வக்கீல் மற்றும் 2 பேரை போலீசார் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். மீதமுள்ள 113 பவுன் தங்க நகைகளையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.