கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது: மாவட்டம் முழுவதும் 1000 போலீசார் ரோந்து
- கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளார்.
- தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையை வாங்கி கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி அதிரடி விசாரணையை தொடங்கி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதுமே போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்து சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
1000 போலீசார் கிராமம் கிராமமாக சென்று சல்லடை போட்டு சாராய கும்பலை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணமான கண்ணுக்குட்டி என்ற கோவிந்தசாமி, தாமோதரன் மற்றும் விஜயா என்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் பின்னணி யில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கள்ளச்சாராய கும்பலை கூண்டோடு கைது செய்ய அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மேலும் 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தொடங்கி இருப்பதால் கள்ளச்சாராய கும்பலை சேர்ந்த அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.