உள்ளூர் செய்திகள்

கோவையில் 7 மாதத்தில் சைபர் கிரைமில் 3,013 வழக்குகள் பதிவு

Published On 2023-08-13 08:57 GMT   |   Update On 2023-08-13 08:57 GMT
  • 77 புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.
  • சைபர் கிரைம் குறித்த புகார்களை அவசர உதவி எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்

கோவை.

கோவை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் ஈடுபடுவர்களை கண்டுபிடித்து தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறன்னர்.

இதன் ஒரு பகுதியாக சைபர் கிரைம் போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். பேஸ்புக், டிவிட்டர், வேலை வாங்கி தருவதாக மோசடி, பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுபவர்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து அதில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை மாவட்ட சைபர் கிரைமில் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த மாதம் வரையிலான 7 மாத காலத்தில் மட்டும் 3,013 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 886 வழக்குகளில் குற்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அதற்கு தீர்வும் காணப்பட்டுள்ளது. 77 புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. மேலும் சைபர் குற்ற வழக்குகள் தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை ரூ.81 லட்சத்து 25 ஆயிரத்து 969 பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளது. மாவட்ட குற்றப்பிரிவில் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் சைபர் கிரைம் புகார்கள் பெறப்படுகின்றன.

சைபர் கிரைம் குறித்த புகார்களை அவசர உதவி எண் 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News