சாத்தூர் அருகே அனுமதியின்றி வைத்திருந்த ரூ.35 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்- குடோன் உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
- பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள குடோனில் அதிகளவில் பட்டாசுகள் வைத்திருப்பது தெரியவந்தது.
- குடோன் சிவகாசி காக்கி வாடன்பட்டியை சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், மோகன்ராஜ் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிவகாசி-மடத்துப்பட்டி சாலையில், பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள குடோனில் அதிகளவில் பட்டாசுகள் வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு சுமார் 1150 பண்டல்களில் பட்டாசுகள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இந்த பட்டாசுகளின் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் ஆகும்.
அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த குடோன் சிவகாசி காக்கி வாடன்பட்டியை சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கிரிதரன் மற்றும் குடோன் பணியாளர் மண்குண்டான் பட்டியை சேர்ந்த முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.