உள்ளூர் செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காணிக்கையாக கிடைத்த தங்கங்களை வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி- அமைச்சர்கள் பங்கேற்பு

Published On 2024-12-27 07:07 GMT   |   Update On 2024-12-27 07:07 GMT
  • பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு தங்களால் இயன்ற பொன் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
  • பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர்:

உலக புகழ்பெற்ற அம்மன் ஸ்தலமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு தங்களால் இயன்ற பொன் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகளை மாதந்தோறும் 2 முறை எண்ணப்பட்டு பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோவில் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

கோவிலில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகள் சரிபார்த்து சொக்க தங்கமாக மாற்றி அனைத்தும் மொத்தமாக மும்பையில் உள்ள ஸ்டேட் பேங்க் வங்கியில் டெபாசிட் செய்யபடுவது வழக்கம்.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத்துறை 2021-2022 மானிய கோரிக்கையின் போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களில், கோவிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய பொன் இனங்களை மும்பையில் உள்ள அரசுக்குச் சொந்தமான தங்க உருக்கு ஆலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என அறிவித்தார்.

இதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 9-ந் தேதி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு தலைமையில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ரவிசந்திரபாபு மற்றும் மாலா ஆகியோர் முன்னிலையில் பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற மொத்தம் 526 கிலோ 435 கிராம் எடையுள்ள பொன் இனங்களை பிரிக்கப்பட்டது.

இப்பணி இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் உறுப்பினர்கள் பிச்சைமணி, சுகந்தி ராஜசேகர், சேதுலெட்சுமணன், இந்து சமய அறநிலையத்துறை 3 மண்டலம் துணை ஆணையர் மற்றும் சரிபார்ப்பு அலுவலர்கள் சரவணன், சிவலிங்கம், ராமு, ஆகியோர் முன்னிலையில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் நடைபெற்று முடிந்தது.

இதில் பொன் இனங்களில் உள்ள அரகு, கல் அகற்றி பயன்படுத்த இயலாத 526 கிலோ 435 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களை உருக்கி தங்க மூதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்காலைக்கு அனுப்பி வைத்தல் மற்றும் கோவிலில் இருப்பில் உள்ள 30 கிலோ 596 கிராம் சுத்த தங்கக் கட்டிகளையும் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதற்காக பொன் இனங்களை பத்திரமாக மூட்டை கட்டி அதற்கு சீல் வைக்கும் பணிகள் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அறங்காவல் குழுவினர், இணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று காலை நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்வதற்கு ஒப்படைக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் கல்ந்துகொண்டு வங்கி அதிகாரிகளிடம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப்குமார், மற்றும் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன், இணை ஆணையர் பிரகாஷ் , கோவில் பணியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News