தமிழ்நாடு

புதிய காற்றழுத்தம் 3 நாளில் உருவாகிறது- 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

Published On 2024-12-27 07:37 GMT   |   Update On 2024-12-27 07:37 GMT
  • ஜனவரி 3-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் ஏற்படக்கூடும். எனவே 10-ந்தேதி அல்லது அதன் பிறகு வடகிழக்கு பருவமழை விடை பெற்றதாக அறிவிக்கப்படும்.
  • ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு, குளிர், வெயில், மழை என வானிலை மாறி மாறி காணப்படும்.

சென்னை:

வட தமிழகத்தின் கரையை ஒட்டி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி முற்றிலும் வலுவிழந்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 3 நாளில் உருவாக உள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்தது.

பின்னர் சில மணி நேரங்களில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி முற்றிலும் வலுவிழந்தது. இது அரபிக்கடல் பகுதிக்கு சென்று விடும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்தாலும் அதன் ஈரப்பதம் ஆங்காங்கே காணப்படும்.

இதன் காரணமாக தமிழகத்தில் 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (28-ந்தேதி) மற்றும் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வருகிற 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த நிலையில் வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் இன்னும் 3 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 3 நாட்களில் அது மேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கை நோக்கி நகரக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது:-

வங்கக்கடலில் புதிதாக உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஜனவரி 1, 2-ந்தேதிகளில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக வடக்கில் இருந்து குளிர் காற்று முழுமையாக வீச இருப்பதால், ஜனவரி 3-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பனியின் தாக்கத்தால் குளிர் கடுமையாக இருக்கும். கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில் உறைபனி இருக்கும்.

வறண்ட வானிலை, வறண்ட வடக்கு காற்று ஊடுருவல் நிகழும்போது, வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்படும். அதன்படி இந்த நிகழ்வு ஜனவரி 3-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் ஏற்படக்கூடும். எனவே 10-ந்தேதி அல்லது அதன் பிறகு வடகிழக்கு பருவமழை விடை பெற்றதாக அறிவிக்கப்படும்.

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு, குளிர், வெயில், மழை என வானிலை மாறி மாறி காணப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News