உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இளம்பெண்களிடம் அத்துமீறிய போதை ஆசாமியால் பரபரப்பு
- போதை ஆசாமி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்களிடம் தகராறு செய்ததோடு அத்துமீறியதாக தெரிகிறது.
- போலீசார் போதை ஆசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்கள், வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பஸ் நிலையம் காலை முதல் இரவு வரை பரபரப்பாக காணப்படும்.
இந்தநிலையில் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்களிடம் தகராறு செய்ததோடு அத்துமீறியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அவரது அராஜகம் அதிகமாகவே வேறு வழி இல்லாமல் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் இணைந்து போதை ஆசாமியை பிடித்து உடுமலை புறக்காவல் நிலையத்துக்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமரா அறையில் அடைத்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்த போதை ஆசாமி அறைக்குள் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் டி.வி.யை உடைத்ததுடன் மது பாட்டில்களையும் உடைத்து வீசியதாக தெரிகிறது.
இதையடுத்து அங்கு வந்த உடுமலை போலீசார் போதை ஆசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இந்த சம்பவத்தால் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.